30 January, 2011

கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?

பெண்ணுரிமை, பெண்கள் சுதந்திரம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு இவ்வாறான கருத்துக்கள் பரபரப்பான விவாதத்தில் இருக்க, மறுபுறம் பெரிய பதவிகள்  தொடங்கி பெட்ரோல் பங்குகள்  வரை பெண்கள்  சாதனை படைத்துக்கொண்டிருக்க, மற்றொரு புறமோ சத்தமின்றி பெண்களின் பிறப்பு விகிதத்தை குறைக்கும் காரியங்கள் நடைபெறுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.
பெண் குழந்தை பிறந்துவிட்டால், அதற்கு கள்ளிப்பால் ஊற்றியும், நெல்லை வாயில் திணித்தும் கொல்லும் கொடுமை சுமார் பத்து ஆடுகளுக்கு முன் தேனி மாவட்டம் உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் தலைவிரித்து ஆடியபோது, அதை தடுக்கும் நோக்கில்,அன்றைய ஆட்சியாளர் 'தொட்டில் குழந்தை திட்டம்' கொண்டுவந்ததையும் , அரசின் கடும் நடவடிக்கைக்குப் பின் பெண் சிசுக்கொலை குறைந்ததையும் நாமறிவோம்.
மேலும் கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா- பெண்ணா என கண்டறிந்து, கருவிலேயே சமாதியாக்கும் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க அரசு, ஸ்கேன் சென்டர்களுக்கு  கடுமையான  கட்டுப்பாடுகள்  விதித்தபோதிலும்,சங்கேத பாஷையில் ஆண்-பெண் என ஸ்கேன் சென்டர்கள் சிலவற்றில் அடையாளம் காட்டப்படுவதாகவும் பரவலான கருத்து நிலவுகிறது.
அடுத்து கருக்கலைப்பு நாளுக்கு நல நவீனமாகி  வருகிறது. கருவுற்ற பெண்ணின் கருவைக் கலைக்க, பழங்காலத்து கிராமத்து வைத்திச்சிகள் எருக்கலங்குச்சியை பயன்படுத்துவர். பின்னர் கருக்கலைப்பு மாத்திரைகள்; அந்த அவ்ரிசையில் தற்போது கோழிக்குழம்பு  மூலம் கருக்கலைப்பு செய்யும் நவீன யுத்தி பரவி வருகிறதாம்.
கோழிக்குஞ்சை  பிடித்து, வழக்கத்தை விட அதிகமாக மிளகு, காரம், எண்ணெய், சீயக்காய் மற்றும் உள்ளூர் மறுத்துவர்கள்  தரும் இரு மாத்திரைகள் சேர்த்து குழம்பாக்கி, ஒருநாள் விட்டு மறுநாள் சாப்பிட்டால், கர்ப்பிணிக்கு அபார்ஷன் ஆகிவிடுமாம். என்ன கொடுமை இது!
இந்த நவீன யுகத்திலும் பெண் குழந்தை  பிறப்பை தடுக்க பெற்றோர் நினைப்பதை வெறும் சட்டங்கள் போட்டு தடுத்திட இயலாது. மாறாக நாட்டில் நிலவும் வரதட்சனை உள்ளிட்ட பென்களுக்கெதிரான கொடுமைகள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டு , பெண் குழந்தை விஷயத்தில் பெற்றோருக்கு நம்பிக்கையூட்டும் வழியை அரசு கண்டறிந்து அதை செயல்படுத்த  முன்வரவேண்டும். அதை விடுத்து வெறுமனே கர்ப்பிணிப் பெண் உதவித்தொகை- திருமண உதவித்தொகை போன்ற சில  உதவிகள் குறைந்துவரும் பெண்களின் விகிதாசாரத்தை உயர்த்தி விடாது என்பதை  அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.  
மேலும், இன்றைய நவீன காலத்தையெல்லாம்   விஞ்சும் வண்ணம் இறைத்தூதர்[ஸல்] அவர்கள், இஸ்லாத்தை எடுத்தியம்பத் தொடங்கிய காலத்தில் பெண்குழந்தையை உயிரோடு புதைக்கும்  நடைமுறை அறியாமைக்கால மக்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட மக்களை இஸ்லாம் எனும் போதனை மூலம் மாற்றியமைத்து, பெண் குழந்தையை போட்டி போட்டு  வளர்க்கும் நிலையை ஏற்படுத்தினார்கள் நபியவர்கள். அதற்கு  ஒரே ஒரு சான்று;
ஹுதைஃபியா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவம்; நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். [புகாரி]
எனவே இஸ்லாம் ஒன்றே பெண் சிசுக்கொலைக்கு அன்றே சாவுமணியடித்து, பெண்ணிற்கு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து உரிமையும் வழங்கியுள்ளது என்பதை எவரால்தான் மறுக்கமுடியும்..?  
-அபூ ஸைஃப்