08 July, 2009

தொலைக்கப்படவேண்டிய தொட்டில் குழந்தை திட்டம்!

தமிழகத்தில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றி கொள்ளும் பழக்கம் சில தென் மாவட்டங்களில் பரவியபோது அதை தடுத்து பெண்குழந்தைகளின் உயிரை காப்பாற்றும் நோக்கில் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டதுதான் தொட்டில் குழந்தை திட்டம். அரசு இத்திட்டத்தை அறிவித்தபோது, தாயின் அரவணைப்பில் வளரவேண்டிய பெண்குழந்தைகளை இன்ஷியல் இல்லா குழந்தைகளாக மாற்றவும், முறைகேடாக கருவுற்று பிள்ளை பெறுபவர்களுக்கு வடிகாலாக்கவும்தான் இத்திட்டம் பயன்படும் என்ற விமர்சனம் எழுந்தது.

இதை மெய்ப்பிக்கும் வகையில், கல்வி மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு இயக்குனர் சங்கர் என்பவர் பொதுநலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், தர்மபுரியில் உள்ள மையத்தில் மட்டும் இதுவரை 1166 பெண் குழந்தைகள் அரசு தொட்டிலில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு மைய்யத்தில் இத்துணை குழந்தைகள் என்றால் தமிழகம் முழுக்க உள்ள மையங்களில் எத்துனை ஆயிரம் குழந்தைகள் இருக்கும்? இந்த குழந்தைகளை அமுதூட்டி அரசு வளர்த்தாலும் அன்னையின் பராமரிப்புக்கு ஈடாகுமா? சரி வளர்ந்தபின்னால் இந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும்? ஒரு குழந்தைக்கு பால் இல்லையென்றாலும் அது தாங்கிக்கொள்ளும். ஆனால் தனக்கு பாலூட்டவேண்டிய அன்னை யார் என்றே தெரியவில்லைஎன்றால்? தந்தையின் மூலம் கிடைக்கவேண்டிய அன்பும்-அரவணைப்பும் இல்லையென்றால் கூட ஒரு குழந்தைக்கு பாதிப்பில்லை. ஆனால் தந்தையே யாரென்று தெரியவில்லைஎன்றால்? சமூகத்தின் அக்குழந்தை பற்றிய பார்வை எப்படியிருக்கும்?

இதை களைவதற்கான தீர்வு என்ன என்பதை அரசு ஆலோசித்திருக்கவேண்டும். பெண் குழந்தைகளை ஏன் பெற்றோர்கள் வெறுக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தால், பெரும்பாலான பெற்றோர்களின் கருத்து என்ன? ஆண் குழந்தையை வளர்த்துவிட்டால் அவன் வளர்ந்தபின் அவனது வாழ்க்கையை அவன் தீர்மானிக்கும் சக்தியை பெற்றுவிடுவான். ஆனால் பெண் குழந்தையை வளர்த்து அது வயதுக்கு வந்தபின் திருமணம் செய்து கொடுப்பதில் இருந்து அது பெரும் பிள்ளைக்கு பிரசவம் பார்ப்பதுவரை இந்த ஆண் வர்க்கம் பெற்றவர்களை கசக்கி பிழிகிறதே! அன்றாட வயிற்றுக்கஞ்சிக்கு வயலில் உழலும் நாங்கள் எங்கே வரதட்சனையும்- சீர்வரிசையும் கொடுத்து இந்த பெண்ணை கரை சேர்க்கமுடியும் என்றுதான் பெண் குழந்தைகளை வெறுக்கிறோம் என்கிறார்களே!

வரதட்சனை ஒழிப்பு சட்டம் என்று பெயரளவில் வைத்துக்கொண்டு, மணப்பெண் தற்கொலை செய்துகொண்டால் மட்டுமே அந்த சட்டம் இன்று பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வரதட்சணையில்லா திருமணங்கள் விரல் விட்டு என்னும் அளவில்தான் நடக்கின்றன. ஒரு திருமணம் நடக்கிறது என்றால் அந்த திருமணத்திற்கு முன்பாகவே அதில் வரதட்சனை பணமாகவோ பொருளாகவோ பறிமாறப்படுகிறதா என்று அரசு என்றாவது கண்கானித்ததுண்டா? வரதட்சனை கொடுமை என்று கேஸ் யாராவது கொடுத்தால் அன்றி வரதட்சனை விசயத்தில் அரசு எந்த தடுப்பு முயற்ச்சியும் செய்யவில்லை. வரதட்சனை வாங்குபவர்களுக்கும்- கொடுப்பவர்களுக்கும் தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் வரதட்சனை ஒழியும்.

அரசுக்கு உண்மையில் பெண் குழந்தைகள் மீது அக்கறையிருப்பின், தொட்டில்குழந்தை திட்டம் ரத்து செய்யப்படவேண்டும்.
பெண் குழந்தையின் அருமையையும் அவசியத்தையும் பெற்றோருக்கு விளக்கவேண்டும்.
பிறக்கும் குழந்தை ஆணாயினும்-பெண்ணாயினும் கண்டிப்பாக பெற்றோர் வளர்க்கவேண்டும்.
பெற்ற பிள்ளையை குப்பை தொட்டியிலும், தெரு வீதியிலும் வீசி செல்பவர்கள் கண்டறியப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டும்.
பெண் குழந்தைகள்- சிறுமிகள்- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படவேண்டும்.

அப்போதுதான் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள். அதைவிடுத்து, தொட்டில் குழந்தை திட்டமோ, அல்லது பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவி திட்டமோ பெண்களின் பிறப்பை அதிகப்படுத்திவிடாது. அவர்களுக்கு சமூக அந்தஸ்தையும் பெற்றுத்தந்துவிடாது என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

0 கருத்துரைகள்: